மெட்ரோ ரயில் பணிகளுக்காக பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி; மெட்ரோ ரயில் பணிகளுக்காக பூந்தமல்லி பேருந்து நிலைய பகுதியில் சாலையோர கடைகளை இன்று (வெள்ளிக்கிழமை) நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

சென்னை மெட்ரோ ரயில் 2 -ம் கட்டப்பணிகள், பூந்தமல்லி டிரங்க் ரோடு பகுதியில் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் முன்பகுதியிலும் உட்பகுதியிலும் ஏராளமான சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகள் வைத்து பழம், பூ வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளுக்கு சாலையோர கடைகள் இடையூறாக இருப்பதால், நகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே சாலையோர வியாபாரிகளை கடைகளை அகற்ற அறிவுறுத்தினர். அதனை பல வியாபாரிகள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலையோரத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர் .

இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலைய பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை இன்று பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர். இதனால் வியாபாரிகளுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, வியாபாரிகளை போலீஸார் சமாதானப்படுத்தினர். அப்போது, வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸார் தெரிவித்ததை அடுத்து வியாபாரிகள் அமைதியாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE