நாகை சுனாமி குடியிருப்பில் கட்டுமான தொழிலாளி வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்: நாகை சுனாமி குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டுமான தொழிலாளி வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழந்தது, மேலும், அந்தக் குழந்தையின் தாயும் படுகாயமுற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக நாகையில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக, சுனாமியால் அதிக அளவில் மீனவ கிராமங்களே பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் மட்டுமல்லாது கடற்கரை அருகில் வசித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வகையில், செல்லூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் கட்டுமான தொழிலாளி விஜயகுமார் என்பவரது வீட்டின் மேற்கூரை இன்று காலையில் இடிந்து விழுந்தது.

இதில் மின் விசிறியும் கீழே விழுந்தது. இதில் விஜயகுமாரின் 2 வயது மகன் யாசிந்தராமன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஜயகுமாரின் மனைவி ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனாமி குடியிருப்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தொடர்ந்து சேதமடைந்து வருவதாகவும், சேதமான வீடுகளால் மீண்டும் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு அரசு வீட்டின் தரத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுனாமி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE