“மருத்துவக் கழிவுகள் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்க” - ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மருத்துவக் கழிவுகளை அறிவியல்பூர்வமாக கையாள்வதாகக் கூறி தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லாததால், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சேகரித்து வரப்படும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு பதிலாக நிலத்தில் புதைக்கின்றனர். மனித உடல்களின் பாகங்களைக் கூட பூமியில் புதைப்பது, பாதுகாப்பற்ற முறையில் எரிப்பது போன்ற செயல்களில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதனால், அந்தப் பகுதியில் நிலத்தரி நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் நோய் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும் என்றாலும் கூட, சுற்றுச்சூழலை கெடுக்கும் அந்த தனியார் நிறுவனத்தை அகற்றுவதற்கு பதிலாக தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்கள் விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, மூடப்பட்ட நிலையில், அதே நடவடிக்கையை போச்சம்பள்ளி மருத்துவக் கழிவு மேலாண்மை ஆலை மீது எடுக்க அரசு தயங்குவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிறுவனத்திற்கு அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தான் என்று இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கழிவுகள் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, வழியாக கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் கேரளத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் அப்பட்டமாக கொட்டப்படுகின்றன. இரு மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் இருந்தாலும் கூட, அவற்றைத் தாண்டி மருத்துவக் கழிவுகள் ஏற்றப்பட்ட சரக்குந்துகள் தமிழ்நாட்டுக்குள் எளிதாக நுழைகின்றன. கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் எந்த பயனும் ஏற்படுவது இல்லை.

மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக்கழிவுகள் முறையாக அழிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும்படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

அத்தகைய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராக இருப்பதாக நீதிமன்றங்களில் தமிழக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் கூட, இன்று வரை அது சாத்தியமாகவில்லை. கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதையும், தமிழகத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களில் அரைகுறையாக கையாளப்பட்டு புதைக்கப்படுவதையும் தடுக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளும், அது சார்ந்த சிக்கல்களும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

எனவே, தமிழகத்தில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்