“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாவட்டம் பேரூரில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாரை, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (செப்.19) மாலை நேரில் சந்தித்தார். தொடர்ந்து, ஆதீனத்திடம், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர் வழங்கி ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரின் இந்த மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. முதல்வரை சந்தித்தபோது, கோவைக்கு செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக்க உள்ளேன் எனக் கூறினேன். அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதவை ஆரம்பித்திலிருந்து எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், அதேபோல் ஜமாத்களின் ஒருமித்த கருத்தும் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் சூழலில், மத்திய அரசு இச்சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது கவலை அளிக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி உரிய நேரத்தில் உள்ளாட்சித் துறையயும், துணை முதல்வர் பதவியையும் ஸ்டாலினுக்கு வழங்கினார். உழைப்பு, உழைப்பு என்றால் அது ஸ்டாலின் தான் என்று அவர் கூறினார். அதேபோல், அந்த உழைப்புக்கு எடுத்துக் காட்டாக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லபிள்ளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்துகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கருணாநிதியைப் போல முதல்வர் ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார்” இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE