அறக்கட்டளையில் சேர்த்து பரிசு தருவதாகக் கூறி பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் - மக்கள் குற்றச்சாட்டு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அறக்கட்டளையில் இணைந்தால் தீபாவளி பரிசு தருவதாகக்கூறி பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

புதுச்சேரியில் தற்போது பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முத்தியால்பேட்டை அகஸ்தியர் வீதியில் புதன்கிழமை (செப்.18) சிலர் பொதுமக்களை சந்தித்துள்ளனர் தாங்கள் புதிய அறக்கட்டளை தொடங்க உள்ளதாகவும் அதில் சேர வேண்டும் என்று தெரிவித்து அவர்களிடம் செல்போன் எண் கேட்டுள்ளனர் .

மேலும் தீபாவளி, பொங்கல் கொண்டாட பண்டிகை நாட்களில் பரிசு தங்களுக்கு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை எடுத்து சுமார் 30 பேர் தங்களுடைய எண்ணை கொடுத்துள்ளனர். அதை எடுத்து அவர்களை அறக்கட்டளை சேர்ப்பதாக கூறி ஓடிபி எண்ணையும் வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (செப்.19) செல்போன் எண் தந்த 30 பேருக்கும் எஸ்எம்எஸ் வந்தது அதில் பாஜகவில் அவர்கள் இணைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து பொதுமக்கள் கொந்தளித்தனர்.

அவர்கள் கூறுகையில், “நாங்கள் வெவ்வேறு கட்சியில் உள்ளோம். நாங்கள் பாஜகவில் சேரவில்லை. ஆனால் பொய் கூறி அறக்கட்டளையில் சேர்ப்பதாக தெரிவித்து பாஜகவில் சேர்த்துள்ளனர். இது ஏமாற்று வேலை. அதனால் அவர்கள் எங்களை பாஜகவில் சேர்த்ததாக கூறினாலும் நாங்கள் தேர்தலில் எங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிக்கு தான் வாக்களிப்போம்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE