கல்வராயன் மலை மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு வழங்க 3 மாதம் அவகாசம் ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை வழங்க 3 மாதம் அவகாசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தங்களது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை 4 வார காலத்துக்குள் வழங்கி, அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “நீதிமன்ற உத்தரவுப்படி கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உரிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும். அவற்றை வழங்கிய பிறகு அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், “எங்களுக்கு அறிக்கை வேண்டாம். அப்பகுதி மக்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவை தான் வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். மேலும், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வழங்க எதற்கு மூன்று மாதம்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, “இன்னும் அப்பகுதிகளில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், “கல்வராயன் மலைப்பகுதிக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சாலையை முழுமையாக சீரமைத்து, புதுப்பிக்கும் பணிக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அரசு அளிக்கும் இந்த விவரங்கள் போதுமானதாக இல்லை. கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவில்லை என்பதால் தான் உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் தனிப்பட்ட கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். கல்வராயன் மலைப் பகுதிக்கு மினிப்பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து நிர்வாக இயக்குநர்கள் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ நாளை (செப்.20) பிற்பகலில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

அப்பகுதியில் போதிய ஆசிரியர்களுடன் பள்ளிகளும், போதிய மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையமும் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாகவும் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்