‘வக்பு வாரிய தடையின்மை சான்று இல்லாமல் சொத்துப் பதிவுக்கு நடவடிக்கை’ - தமிழ்நாடு வக்பு வாரிய புதிய தலைவர் நவாஸ்கனி எம்பி

By கி.கணேஷ்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நவாஸ்கனி எம்.பி., முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், ''வக்பு வாரிய தடையின்மை சான்று பெறாமல் சொத்துப் பதிவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். கடந்த ஆக.19-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டது. இதற்கிடையில், வக்பு வாரியத்தில் முஸ்லிம் எம்.பி., உறுப்பினர் பதவி காலியாக இருந்ததால், அதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஐயுஎம்எல் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி-யான நவாஸ்கனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவர் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் தேர்வானார். இன்று காலை, வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்ற அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன் பிறகு நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வக்பு வாரிய அலுவலகத்தில் இன்று காலை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் வக்பு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். முக்கிய காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக முதல்வருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும், பரிந்துரைத்த தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றி. வக்பு வாரியம் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்.

வக்பு வாரிய நிலங்களை பாதுகாப்பது, இருக்கும் நிலங்களை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோம். வக்பு வாரியத்தில் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்று வாரிய உறுப்பினர்கள் கலந்தாலோசித்து முதல்வரிடம் தெரிவி்த்துள்ளோம். வரும் கூட்டங்களில், தடையில்லா சான்று கொடுப்பதை நிறுத்திவிட்டு ஏற்கெனவே எந்த நடைமுறை இருந்ததோ அந்த வகையில் எளிதாக சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் முறையாக அடையாளம் காணப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE