கங்கைகொண்டான் சிப்காட்  குடியிருப்பு வளாகத்தில் 500 பெண்களுக்கு தங்கும் வசதி: அரசு ஒப்பந்தம்

By கி.கணேஷ்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 870 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள, குடியிருப்பு வளாகத்தில் டாடா பவர் சோலார் நிறுவன தொழிற்சாலையில் பணியாற்றும் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தமிழக அரசு மற்றும் டாடா பவர் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பணியாற்றும் 1,500 பெண் பணியாளர்கள் தங்க ஏதுவாக ரூ.50 கோடியில் குடியிருப்பு வளாகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ. ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வளாகம் 1.20 லட்சம் சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டிடமாக ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, உட்புற சாலை, குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், தெரு விளக்குகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், இங்கு, சமையலறை மற்றும் சாப்பாட்டு வசதிகள், வெளிப்புற விளையாட்டு பகுதி, தொழிலாளர்கள் அறை, ஒவ்வொரு தளத்திலும் பொழுதுபோக்கு அரங்குகள், சலவை அறைகள், உலர்த்தும் பகுதி, மருத்துவ அறை போன்ற வசதிகள் இருக்கும்.

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டாடா பவர் சோலார் (டிபிஎஸ்எல்) நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.4,300 கோடி முதலீட்டில், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோலார் போட்டோவோல்ட் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தியை மேற்கெண்டு வருகிறது. இங்கு பணியாற்றுவோரில், 80 சதவீதம் பெண்களாவர். இந்நிலையில், இந்த டிபி சோலார் நிறுவனம் தனது தொழிற்சாலையில் பணியாற்றும் 500 பெண் பணியாளர்கள் கங்கைகொண்டான் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் தங்குவதற்காக, தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.சினேகா, டாடா பவர் நிறுவன மனித வள மேம்பாடு முதன்மை அலுவலர் அனுபமா ரட்டா, டாடா பவர் சோலார் முதன்மை செயல் அலுவலர் பாலாஜி பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE