“அதிமுக ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி” - தமிழ்மகன் உசேன் பேச்சு

By பெ.பாரதி

அரியலூர்: “அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம். நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தார்” என அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.

அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் தாமரை.ராஜேந்திரன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “உண்மையான திமுக எங்கு இருக்கிறது என்று சொன்னால், தந்தை பெரியார் வளர்த்த திராவிடர் கழகம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் என்பேன். ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர், ‘தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டேன் இனி என் வாழ்க்கையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’ என அறிவித்தார்.

அதுபோல எடப்பாடி பழனிசாமியும் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். ஏனென்றால் நான்கரை ஆண்டு ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும். அது இஸ்லாமிய தோழர்களுக்கு தெரியாதது அல்ல. ஆட்சியைக் காப்பாற்றத்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது பாஜகவுடன் கூட்டணி எந்தக் காலத்திலும் இனி கிடையாது. கட்சியின் அவைத்தலைவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செய்தது. ஆனால் திமுக என்ன செய்தது? ஆகவே வரும் காலங்களில் அதிமுகவை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE