வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய புகாருக்கு உடனடி தீர்வு: தென்னக ரயில்வேக்கு வணிகர்கள் நன்றி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கடலூர் - மைசூர் விரைவு ரயிலில் கழிவறையில் உள் தாழ்ப்பாள் சேதமடைந்தது குறித்து தென்னக ரயில்வேக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர் செய்த தென்னக ரயில்வேவுக்கு வணிகர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

கடலூரில் இருந்து மைசூர் விரைவு ரயில் கடந்த 18-ம் தேதி புறப்பட்டது. அதில் கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்யநாராயணன் மற்றும் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது அவரது அருகில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது உள் தாழ்ப்பாள் சேதமடைந்திருந்ததை அறிந்தார். இது தொடர்பாக அவர், வி.சத்தியநாராயணனிடம் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அவர் கழிவறைக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த தாழ்ப்பாள் சேதமடைந்திருந்ததால் பயணிகள் யாரும் உபயோகிக்க வேண்டாம் என துண்டு சீட்டில் எழுதி அதன் முகப்பில் சொருகி வைத்தார். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கச் செயலாளர் ஏ.கிரியிடம், புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.

ஏ.கிரி, உடனடியாக, திருச்சி தென்னக ரயில்வே பயணிகள் குறைதீர் மையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்துடன் அந்தத் தகவலை அனுப்பினார். இந்த நிலையில் அந்த ரயில் திருச்சி சென்றடைந்ததும், தென்னக ரயில்வே அதிகாரிகள் உத்தரவின் பேரில் அந்த கழிவறையின் உள் தாழ்ப்பாள் உடனடியாக புதிதாக மாற்றப்பட்டது. பின்னர் புகார் அனுப்பிய ஏ.கிரிக்கு, புதியதாக மாற்றப்பட்ட தாழ்ப்பாள் புகைப்படத்துடன் வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து 2 பேரும் பயணிகள் குறைதீர் மையத்திற்கும் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர். நீண்ட தூரம் செல்லும் பயணிகள் ரயிலில் உள்ள குறைபாடுகளை பிரதான ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டால் இது போன்ற சிரமங்கள் ஏற்படாது. எனவே, தென்னக ரயில்வே நிர்வாகம் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE