விதிமீறல் கட்டிடங்களை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - செங்கை ஆட்சியர் அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், தழுதாளி குப்பத்தை சேர்ந்த கண்ணப்பன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல்செய்த மனுவில், ‘‘செய்யூர் தாலுகா, லத்தூர் ஒன்றியத்துக்குஉட்பட்ட முதலியார் குப்பம், பரமன்கேணி கடலோரப் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இப்பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -3 பகுதியில் வருகிறது. ஆனால் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடித்து அகற்ற தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியி ருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை: பரமன்கேணி பகுதியில் 3 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டிடம் கட்ட, கிராம ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதரகட்டிடங்களுக்கு அனுமதி பெறவில்லை. இந்த 3 கட்டிடங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் மின் இணைப்புதுண்டிக்கப்பட்டது. இந்த வீடுகளை ஏன் இடிக்கக்கூடாது எனவிளக்கம் கேட்டு மாவட்ட நகரமைப்பு குழும துணை இயக்குநர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்த நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள், ‘‘விதிகளை மீறி கட்டப்பட்ட வீடுகளை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செங்கை ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE