தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023-ம் ஆண்டின் விதிமுறைகளை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு பிளே ஸ்கூல் சங்க பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் 6000 பிளே ஸ்கூல்கள் உள்ளன. இவற்றில் 1.80 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். 30 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழக அரசு 2023-ல் புதிய விதிமுறைகளை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

புதிய விதிமுறைகள் கடுமையானதாக உள்ளது. இந்த விதிமுறைகளால் பிளே ஸ்கூல் நடத்த அனுமதி பெறுவதிலும், பிளே ஸ்கூல்களை நடத்துவதிலும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. புதிய விதிமுறைகளை சுட்டிக்காட்டி பிளே ஸ்கூல்களை மூடுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 2015-க்கு முன்பு பிளே ஸ்கூல்கள் சமூக நலத்துறையின் கீழ் இருந்து வந்தது. அப்போது அனுமதி பெறுவது எளிமையாக இருந்து வந்தது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பிளே ஸ்கூல்கள் கொண்டுச் செல்லப்பட்ட பிறகு பிளே ஸ்கூல் நடத்தும் கட்டிடத்துக்கு உரிமையாளருடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் போட வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த விதிமுறைகளை தளர்த்தக்கோரி அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பிளே ஸ்கூல் தொடர்பான தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) சட்டம் 2018 பிரிவுகளையும் மற்றும் தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) 2023 விதிகளையும் செயல்படுத்த தடை விதித்தும், பிளே ஸ்கூல்களை மூடவோ, மூடுமாறு மிரட்டல் விடவோ கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அபிஷா ஐசக் ஜார்ஜ் வாதிட்டார். விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், தமிழகத்தில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE