நவாஸ்கனி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கி்ல் நவாஸ்கனி எம்பி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலி்ல் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதையடுத்து நவாஸ்கனி பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும், வேட்புமனுவில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், எனவே நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் நவ.5-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE