1,550 வணிக கட்டிடங்களை குடியிருப்புகளாக காட்டி சொத்துவரி நிர்ணயம்: மதுரை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த காலங்களில் 1,550 வணிக வளாக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி, சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி பணியாளர்களுடைய இந்த அலட்சிய நடவடிக்கையால் மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு ரூ.6 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்து 45 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 60,000 வணிக கட்டிடங்களும், மீதமுள்ள கட்டிடங்கள் குடியிருப்பு கட்டிடங்களாகவும் உள்ளன. இந்த கட்டிங்களுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்கின்றனர். ஏ, பி, சி கிரேடு அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட சொத்து வரியும், வணிக கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு ஒரு சொத்து வரியும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த சொத்து வரியை, கட்டிட உரிமையாளர்கள், ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இதில், குடியிருப்புகளுக்கான சொத்து வரியை பொதுமக்கள், ஓரளவு முறையாக செலுத்தி விடுகிறார்கள். ஆனால், வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், ஹோட்டல்கள் போன்ற வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை, அதன் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக செலுத்துவதில்லை. அவர்கள், ஒவ்வொரும் ஏதாவது ஒரு அரசியல் பின்னணியில் இருப்பதால் ஏதாவது காரணம் சொல்லி சொத்து வரி செலுத்துவதை தள்ளிப்போடுகிறார்கள்.

மாநகராட்சி நோட்டீஸ் விட்டு நடவடிக்கை எடுக்கும்போது, ஆளும்கட்சி, எதிர்கட்சி அரசியல் பிரமுகர்கள் மூலம் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். அதையும் தாண்டிதான் மாநகராட்சி அதிகாரிகள், இந்த கட்டிடங்களுக்கு சொத்துவரியை வசூல் செய்ய வேண்டி உள்ளது. சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கை காரணம் காட்டி சொத்து வரி செலுத்துவதில்லை. மாநகராட்சி சட்டப்பிரிவு வழக்கறிஞர்களும், அந்த வழக்குகளை சிறப்பாக கையாண்டு, சொத்து வரி செலுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மாநகராட்சி கடந்த சில ஆண்டாக நிதி நெருக்கடியில் சிக்கி வந்தது.

மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் வந்தபிறகு, மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைபோல், நிதி ஆதாரத்தை பெருக்குவதற்குமான நடவடிக்கை எடுத்தார். சொத்து வரி அதிகம் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களை பட்டியலை எடுத்து, அவர்கள் சொத்து வரியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். வழக்குகள் இருப்பதாக காரணம் சொல்லியவர்களை, மாகநராட்சி வழக்கறிஞர்கள் குழுவை கொண்டு அதே வழக்குகளை தூசி தட்டி மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து வரி கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தார். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருந்தன. அவர்கள் நிறுவனத்திற்கு ‘சீல்’ வைப்பதாக மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்ததும், தகவல் அறிந்த அந்த நிறுவனத்தினர் ஓடோடி வந்து சொத்துவரி பாக்கியை செலுத்தினர். மாநகராட்சி ஆணையாளரின் இந்த தொடர் நடவடிக்கையால் தற்போது நிதிநெருக்கடியில் மாநகராட்சி மீண்டுள்ளது.

இந்நிலையில் சொத்து வரியை குறைத்து மதிப்பீடு செய்து நிர்ணயம் செய்த கட்டிடங்களையும் ஆய்வு செய்து, எந்த அரசியல் நெருக்கடிகளுக்கும் இடம் கொடுக்காமல் அதன் மீது கறாராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது அடுத்தக்கட்டமாக, மாநகராட்சி முக்கிய சாலைகளில் வணிக கட்டிடங்களை ‘திடீர்’ ஆய்வு செய்த கட்டிடங்களை மறு அளவீடு செய்ய உத்தரவிட்டார். இந்த கட்டிடங்களின் தற்போதைய மறு அளவீடு, சொத்து வரி விதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அளவீடுக்கு ஒத்துப்போகிறதா? என ஆய்வு செய்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளே அதிர்ச்சியடையும் வகையில், சுமார் 2,000 வணிக கட்டிடங்களை ஆய்வு செய்ததில், 1,550 கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி மாநகராட்சி பணியாளர்கள் சொத்து வரியை மிக குறைவாக நிர்ணயம் செய்திருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த காலத்தில் சொத்துவரி நிர்ணயம் செய்தபோது, செய்த அளவீடுக்கும், தற்போது மறுஆய்வின்போது செய்த அளவீடுக்கும் நிறைய வேறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடங்களை குடியிருப்பு பட்டியலில் இருந்து வணிக கட்டிடத்திற்கு மாற்றி, மறுஅளவீடுக்கு தகுந்தார்போல், வணிக கட்டிட சொத்து வரி நிர்ணயம் செய்யவும், இதுவரை மாநகராட்சிக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாயையும் ஈடு செய்ய ஆணையாளர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

ரூ.140 வரி செலுத்தியவருக்கு இனி ரூ.1 3/4 லட்சம்: மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதற்கட்ட ஆய்வில் அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, அய்யர் பங்களா, பை-பாஸ் ரோடு, கோரிப்பாளையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் உள்ள 1,550 வணிக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி சொத்து வரி நிர்ணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், 6 மாதத்திற்கு சொத்து வரியாக ரூ.140 செலுத்தியவர்கள், இனி ரூ. 1 3/4 லட்சமும், ரூ. 3,000 செலுத்தியவர்கள் ரூ. 20 லட்சமும், ரூ.4 ஆயிரம் செலுத்தியவர்கள், ரூ.4 1/2 லட்சமும் இனி சொத்து வரியை கூடுதலாக செலுத்த வேண்டும்.

இந்த வணிக வளாக கட்டிடங்கள் கண்டுபிடிப்பால் மாநகராட்சிக்கு தற்போது 6 மாதத்துக்கு சொத்து வரி வருவாய் ரூ.6 கோடி அதிகரித்துள்ளது. தற்போது ஆணையாளர் உதவி ஆணையாளர் தலைமையில் சிறப்புவிசாரணை குழுவை அமைத்து 100 வார்டுகளிலும் வணிக வளாக கட்டங்கள் அளவீடு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், மாநகராட்சிக்கு இன்னும் ரூ.20 கோடிக்கு மேல் சொத்துவரி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்