“ராகுல் காந்தி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்” - ஹெச்.ராஜா உறுதி

By கி.தனபாலன்


ராமநாதபுரம்: “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மீனவர் மட்டுமே சுட்டு கொல்லப்பட்டார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாட தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ராமநாதபுரம் நகர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா இன்று (செப்.18) வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகீம், மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா கூறியது: “தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறிப்போய் இருக்கிறது. உளவுத்துறை அறிக்கையின்படி 850 காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். முதல்வர் ஆட்சி ஆள வேண்டும், இல்லையேல் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 45 பெண் குழந்தைகளை அப்பள்ளியின் தலைமையாசிரியரின் மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத அமைச்சர் அன்பில் மகேஷ், ஒருவர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியதைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மீனவர் மட்டுமே சுட்டு கொல்லப்பட்டார். முதல்வர் வெளிநாடு சென்று கோடி கோடியாக முதலீடு பெற்று வருவார் என எதிர்பார்த்த மக்கள் தெருக்கோடியில் தான் நிற்கின்றனர். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாட தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, “நாட்டுக்கு விரோதமாக பேசக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு ஆன்டி இந்தியன். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இலாஸ் உமர் உள்ளிட்ட இந்திய விரோத சக்திகளுடன் அலவளாவி வருகிறார்” என்று ஹெச்.ராஜா பேசியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE