“பெரியார் அரசியலுக்கு வலு சேர்ப்பார் தவெக தலைவர் விஜய்!” - திருமாவளவன் கருத்து

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: “நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்,” என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையத்தில் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் காளியாதேவி இல்லத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (செப்.18) நேரில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “காளியாதேவி விபத்தில் உயிரிழந்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதை அவரது குடும்பத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் காவல்துறையிடம் தெரிவித்து வருகிறோம்.

பஞ்சமி நிலங்கள் பிற சமூகத்தினரால் ஆக்கிரமிப்படும் நிலையில், அதனை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என இந்தப் பகுதியில் போராடியவர் காளியாதேவி. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருக்கிறது என காவல்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், உரிய நீதி கிடைக்கவில்லை. ஆகவே, இதனை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும். விபத்தால் நிகழ்ந்தது அல்ல. விபத்தாக மாற்றி களியாதேவி கொல்லப்பட்டிருக்கிறார். 2026-ல் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி ஒட்டியிருப்பது, ஒரு ஜனநாயகபூர்வமான கோரிக்கை.

அதிகாரத்தை ஜனநாயகத்துப்படுத்துவது எங்கள் நிலைப்பாடு. கூட்டணியில் இருந்து கொண்டு தான், வலியுறுத்துகிறோம். பெரியார் அரசியலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஏற்கெனவே இதனை எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE