பந்த் காரணமாக பள்ளி விடுமுறை: கூட்டணிக்கு அதிர்ச்சி தந்த புதுச்சேரி முதல்வர்!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இண்டியா கூட்டணி பந்த் போராட்டத்துக்கு 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை தந்து கூட்டணிக்கு முதல்வர் ரங்கசாமி அதிர்ச்சி தந்துள்ளார். நாடு முழுவதும் ஆளும்கட்சி செயல்பாடுகளை எதிர்த்து எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். அதேபோல் ஒருகட்டத்தில் தங்கள் எதிர்ப்பை தீவிரமாக காட்ட எதிர்க்கட்சிகள் பந்த் நடத்துவார்கள். எதிர்க்கட்சிகளின் பந்த் போராட்டத்தை முறியடிக்க பல்வேறு வகைகளில் ஆளும் அரசுகள் செயல்படும். சில எதிர்க்கட்சிகளின் பந்த் போராட்டத்தை முறியடித்து ஆளும் அரசுகள் வெற்றியும் பெற்றுள்ளன.

புதுவையை பொறுத்தவரை பொது போக்குவரத்து தனியார்வசம்தான் உள்ளது. குறைவாகவே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், மார்க்கெட் சங்கங்கள் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக யார் பந்த் அறிவித்தாலும் கடையை மூடிவிடுவார்கள். இதனால் நீண்டகாலமாகவே புதுவையில் லெட்டர் பேடு கட்சிகள், சாதாரண அமைப்புகள் தொடங்கி யார் பந்த் அறிவித்தாலும், போராட்டம் முழு வெற்றியடையும். இத்தகைய சூழலில் ஆளும்கட்சியின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளான இண்டியா கூட்டணி கட்சிகள் பந்த் போராட்டத்தை இன்று நடத்தினர்.

கடந்த முறை அதிமுக பந்த் அறிவித்தபோது அக்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். அதுபோல் நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகத்தில் அதிமுகவினர் மனுவும் தந்தனர்.ஆனால், வழக்கம்போல அரசு பந்த் போராட்டத்தை முறியடிக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு, ஒருபடி மேலே சென்று பந்த் போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். அதை கல்வித்துறை உத்தரவாக வெளியிட்டது. இது எதிர்க்கட்சிகளான இண்டியா கூட்டணிக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல முதல்வர் ரங்கசாமியின் இந்த விடுமுறை அறிவிப்பு அவருடன் கூட்டணியில் உள்ள பாஜகவினருக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE