பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம்: திருவாரூரில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் வேளாண் அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2023 - 24-ம் நிதியாண்டுக்கான சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை அண்மையில் விடுவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 561 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான உரிமம் பெற்ற இப்கோ டோக்கியோ நிறுவனமானது, 72 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கி உள்ளது. இதனால் எஞ்சியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளே ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஐந்து இடங்களில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டூரில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ-வான க.மாரிமுத்து, மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-வான உலகநாதன், முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முருகையன், வலங்கைமானில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா, கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பு செயலாளர் கேசவராஜ் ஆகியோர் தலைமையில் வேளாண்மை அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE