இரு அமைச்சர்கள் மீதான சொ.கு. வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரி மனு: ஐகோர்ட் நோட்டீஸ்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 433 அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதேபோல தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய வருவாய் துறை அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ. 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த இரு அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் மறுவிசாரணை நடத்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர்கள் இருவரும் தங்களது மனைவிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவருக்கும் எதிரான இந்த வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் முக்கிய துறைகளை கவனித்து வருகின்றனர். வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, உள்துறை பொறுப்பை கவனிக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நியாயமான விசாரணை நடைபெறவும், நீதியின் நலனை பாதுகாக்கவும் புலன் விசாரணை அதிகாரியும், அரசு தரப்பு வழக்கறிஞர்களும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும் இரு வழக்குகளையும் நடத்த அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக 4 வார காலத்தில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE