உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என செய்தி பரவியதால் கட்சி அலுவலகங்களில் திரண்ட திமுகவினர் @ தஞ்சை

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப் படுவதாக இன்று (புதன்கிழமை) காலை முதல் தகவல் பரவியதால், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் திமுக அலுவலகங்களில் திரண்ட திமுகவினர், 3 மணி நேரம் காத்திருந்து இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றபோது, துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் அப்போது வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக சென்னை அண்ணா அறிவாலத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.

இந்த தகவல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்த்தியில் பரவியதால், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் திமுகவினர் கட்சி அலுவலகங்களில் திரண்டனர். கட்சித் தலைமையின் அறிவிப்பை எதிர்பார்த்து தஞ்சாவூரில் திமுகவினர், அண்ணா சிலை அருகிலும், கும்பகோணம் மாநகர திமுக அலுவலகத்திலும் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது காத்திருந்த திமுக-வினருக்கு, உதயநிதி துணை முதல்வராவது தொடர்பான அறிவிப்பு ஏதும் வராததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனால் கும்பகோணம், தஞ்சாவூரில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE