தொழில்நுட்ப கோளாறு: சென்னை - சிங்கப்பூர் விமானம் 8 மணி நேரம் தாமதம்

By சி.கண்ணன்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று (செப்.18) 8 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு இரவு 11.40 மணிக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இன்று இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக 174 பயணிகள் குடியுரிமைச் சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு அதிகாலை காத்திருந்தனர். ஆனால், சிங்கப்பூரில் இருந்து விமானம் தாமதமாக அதிகாலை 12.21 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதால், அதனை சரி செய்த பின்னரே விமானத்தை இயக்க முடியும் என்று விமானிகள் தெரிவித்ததால், விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் காலை 5 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விமானம் காலை 8 மணிக்கு புறப்படும் என்றும், பின்னர் 10 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. பின்னர் 8 மணி நேரம் தாமதமாக, காலை 10 மணி அளவில் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE