முழுவீச்சில் பந்த்: இண்டியா கூட்டணி - புதுச்சேரி அரசு மறைமுக உறவு அம்பலம்; அதிமுக விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும் அரசுக்கும் இடையில் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.

இது குறித்து அதிமுகவின் புதுவை மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் கட்டண உயர்வு தொடர்பாக நடைபெற்று வரும் பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும், அரசுக்கும் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பந்த் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கைது செய்ய வேண்டுமென அதிமுக சார்பில் காவல்துறையிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது திமுக எம்எல்ஏ-க்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நான் உட்பட 410-க்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளை போலீஸார் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தனர். ஆனால், இன்று நடைபெற்ற பந்த் போராட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒருவரைகூட போலீஸார் கைது செய்யவில்லை.

இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தவளக்குப்பம், திருக்கனூர், மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், காரைக்கால், கோரிமேடு, வெங்கடசுப்பையா சிலை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் கையில் தடியுடன் சென்று கடைகளை மூட வேண்டும் என கடை உரிமையாளர்களை மிரட்டினர். அதற்கு ஒரு படி மேலே சென்று கோரிமேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இதில் ஒரு சில பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. சட்டப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை கைது செய்யாதததே இதற்கெல்லாம் முதல் காரணம். நடைபெற்ற இந்த சட்டவிரோத செயலுக்கு பந்த் அறிவித்த காங்கிரஸ் தலைவர்கள், திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் இண்டியா கூட்டணியின் கட்சி தலைவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பந்த் சம்பந்தமாக காலையில் மாவட்ட ஆட்சியர் பள்ளிகள் இயங்கும் என அறிக்கை விடுகிறார். ஆனால் மாலையில், நம் மாநில முதல்வர் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார். இப்படி பந்த் நடத்துபவர்களுக்கு ஆதரவான ஒரு நிலைபாட்டை அரசு எடுத்து அறிவிப்பது என்பது எங்கும் நடக்காத ஒரு செயலாகும். மின் கட்டணத்தை உயர்த்திய அரசை எதிர்த்து பந்த் நடத்திய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி கூறியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் சிறு பிள்ளைகளுக்கு பந்த் போராட்டத்தினால் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என கருத்து கூறிய முதல்வரை திமுக, காங்கிரஸ் கட்சியினர் களங்கப்படுத்தியுள்ளனர் என்பதை முதல்வர் உணர வேண்டும். காவல்துறையை கையில் வைத்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறையின் உயரதிகாரிகளை அழைத்து ஒரு கூட்டம் போடவில்லை. அவர் இந்தியாவில் இல்லை. அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE