மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்: மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் குழு நேரில் விசாரணை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம் மற்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள குழு இன்று (புதன்கிழமை) மாஞ்சோலை சென்று விசாரிக்க உள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028 உடன் முடிவடையுள்ளதால் அதற்கு முன்னதாகவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரிக்க தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, இந்த குழுவானது மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழுவானது இன்று நெல்லை வந்துள்ளது. இந்தக் குழுவானது இன்று மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்த இருக்கிறது. இந்தக் குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகள் ரவி சிங் (துணை காவல் கண்காணிப்பாளர், யோகேந்திர குமார் திரிபாதி ( ஆய்வாளர்) இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா ஆகியோருடன் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE