தமிழகத்தில் இன்று இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்.23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 35.6-39.2 டிகிரி பாரன்ஹீட் என்ற வகையில், இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100-102 டிகிரியை ஒட்டி இருக்கக்கூடும்.

13 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. இதில் அதிகபட்சமாக மதுரை நகரம், விமான நிலையத்தில் தலா 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 103, அதிராமப்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் தலா 102, கரூர் பரமத்தி, திருச்சியில் தலா 101, சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், வேலூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதேபோல், காரைக்காலில் 101, புதுச்சேரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 2 செமீ மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE