பெரியார் 146-வது பிறந்தநாள்: சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி என தலைவர்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் இருந்தனர்.

இதையொட்டி, முதல்வர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "புரட்டுக் கதைகளுக்கும் வறட்டுவாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள் எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போடவைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம். உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம். ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீ தான் நமது பாதைக்கான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி" என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைமை அலுவலகத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியரகம் அருகே அமைந்துள்ள பெரியார்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செ.செம்மலை ஆகியோர் மரியாதை செலுத்தினர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி, கவுவரத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சென்னையில் அதிமுக சார்பில் கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் மு.தம்பிதுரை எம்.பி., சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் எம்.பி., நா.பாலகங்கா, அமமுக சார்பில்முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் திராவிடர் கழகத் துணைத் தலைவர்கலி.பூங்குன்றன் தலைமையிலான திகவினரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ‘விடுதலை‘ மலரைதிராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் வெளியிட, தி.க. பொருளாளர் வீ.குமரேசன், வழக்கறிஞர் ஆ.வீரமர்த்தினி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். வழக்கறிஞர் அ.அருள்மொழி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நடிகர் விஜய்: இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரியார்நினைவிடத்தில் மலர் வளையம்வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இருந்தார். விஜய் கட்சி தொடங்கிய பின்னர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.

முன்னதாக அவர் எக்ஸ் தளத்தில், "சாதி, மத ஆதிக்கம்மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்ததமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம்,ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்கரட்டீஸ், பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடிபெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்துக்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்.

இதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் சமூகவலை தளத்தில் பெரியாருக்கு புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE