துவாக்குடி சுங்கச்சாவடி உடைப்பு: மமக எம்எல்ஏ உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு

By அ.சாதிக் பாட்சா


திருச்சி: திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை மமக எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் நேற்று (செப்.16) திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ப.அப்துல் சமது தலைமை வகித்தார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் சிலர் சுங்கச்சாவடி கேபின், கண்காணிப்புக் கேமராக்கள், தடுப்புக் கட்டைகள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார், போராட்டம் செய்ய அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச்சாவடியை சேதப்படுத்தியது என 2 பிரிவுகளில் மமக எம்எல்ஏ-வான அப்துல் சமது உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE