வேலூரில் சிறை கைதி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் - விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீஸார் 

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (30). இவர் ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சிவகுமாரை, விதிமுறைகளை மீறி சிறைத்துறை வேலூர் சரக டிஐஜி-யான ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், ராஜலட்சுமி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடியதாக சிவகுமாரை 95 நாள்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சிவகுமாரின் தாயார் கலாவதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகாரில் தொடர்புடைய டிஐஜி-யான ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள் குமரன், டிஐஜி-யின் மெய்க்காவலர்கள் ராஜூ, சிறப்புப் படை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வேலூர் சிபிசிஐடி அதிகாரிகள், 14 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள், வேலூர் மத்திய சிறை, சேலம் மத்திய சிறை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி-யின் மெய்க்காவலர் ராஜூ, காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

இந்த அழைப்பாணையின்படி, 4 பேரும் சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று காலை ஆஜரானார்கள். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், வழக்குத் தொடர்பாக முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவு போலீஸார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE