கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: மதுரவாயல் மேம்பால சர்வீஸ் சாலையில் ஆட்டோ மீது மோதியது

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரவாயல் மேம்பாலத்தில் நேற்று சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். பேருந்து பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி மாநகர அரசு பேருந்து (தடம் எண் 104K) நேற்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை தாம்பரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜேஷ் (42) ஓட்டினார். 3.45 மணியளவில் மதுரவாயல் பைபாஸ் சாலை வானகரம்ஓடோமா நகர் வழியாக மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி,15 அடி கீழே விழுந்து சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரான மாதவரத்தைச் சேர்ந்த தினேஷ் (43) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த பயணிகள் பலர்காயமடைந்தனர். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குதகவல் தெரிவித்தனர். மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்துகோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பேருந்தில் 40 பேர் இருந்த நிலையில் அவர்களில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ஆரோக்கிய ராஜேஷை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுபோலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE