“முழு மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்” - எல்.முருகன் வலியுறுத்தல்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: “முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

விருதுநகரில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.16) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 2-ம் தேதி பிரதமர் மோடி இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். இதுவரை இந்திய அளவில் 4 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக. ஏற்கெனவே 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்களாக்க இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்திலும் 1 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கோடு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

விருதுநகர் அருகே கிராமப் பகுதியை பார்வையிட்டபோது போலி திராவிட மாடல், போலி சமூக நீதி ஆட்சியை கண்கூடாக பார்த்தோம். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு அதில் தண்ணீர் வரவில்லை. குப்பைகள் அகற்றப்படவில்லை. 1996-ல் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு சேதமடைந்துள்ளது. தற்போது ஒரே வீட்டில் 4-5 குடும்பங்கள் வசிக்கிறார்கள். அருகில் உள்ள இடத்தில் அவர்கள் பட்டா கேட்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் கொடுப்பதாக கூறியுள்ளது.

தொல்.திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது நாடகம். தமிழக முதல்வர் அமெரிக்காவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சென்றார். அந்த அளவு முதலீடு இல்லை என்பதால் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை நடத்துகிறார். இந்த அரசு மக்களை திசைதிருப்ப இதை கையில் எடுத்துள்ளது. நாங்கள் ஆட்சியில் உள்ள குஜராத்திலும், கூட்டணி ஆட்சி உள்ள பிஹாரிலும் மதுவிலக்கை கொண்டு வந்துள்ளோம்.

தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. ஆனால், திமுக அதை செய்யாது. டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஏராளமான தனியார் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். நாடகமாடுவதை நிறுத்த வேண்டும். தமிழக கல்வித்துறைக்கு வரும் நிதியை வழங்க யாரும் தடுக்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்கள், கையெழுத்திட்டார்கள்.

ஆனால் அதன்பிறகு பின்வாங்கி இருக்கிறார்கள். அதில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை ஒப்புக்கொண்டால் மத்திய அரசு நிதி வழங்கிவிடும். அனைத்து வகை ஒலிபரப்பையும் முறைப்படுத்த புதிய கொள்கைகளை கொண்டு வந்துள்ளோம். பொது மக்களின் பெருவாரியான கருத்தைக்கேட்டு அமல்படுத்தப்படும். கருத்து சுதந்திரம் இருந்தாலும் இது நாட்டு நலனை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். முன்னதாக, விருதுநகர் அருகே குமாரபுரம் இந்திரா நகரில் சேதமடைந்த குடியிருப்புகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE