சென்னை - தோஹா விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து தோஹா செல்லும் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இன்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோஹாவுக்குச் செல்ல இருந்த 320 பயணிகள், அதிகாலை 1.30 மணிக்கு எல்லாம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டனர்.

அப்போது, “தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோஹாவில் இருந்து விமானம் தாமதமாக புறப்படும். அதனால், சென்னையில் இருந்து தோஹா செல்லும் விமானமும் தாமதமாக புறப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

சென்னையில் இருந்து தோஹா செல்லும் விமானம் காலை 6.30 மணிக்கு புறப்படும் என்றும், பின்னர் 7.30 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தோஹாவில் இருந்து விமானம் வராததால், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பயணிகளை சமாதானப்படுத்தி அவர்களுக்கு டீ ,காபி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக, காலை 8 மணிக்கு தோஹாவில் இருந்து விமானம் சென்னை வந்தது. விமானம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, 320 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஐந்தரை மணி நேரம் தாமதமாக காலை 9.40 மணி அளவில் சென்னையில் இருந்து தோஹாவுக்கு விமானம் புறப்பட்டது. இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE