இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிப்பு; மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: மார்க்சிஸ்ட், பாமக கட்சிகள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிக்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வந்த இலங்கை அரசின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜகப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையும் மீனவர்கள் பிரச்சினையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. இதையொட்டி இலங்கை அரசையும், தமிழக மீனவர்களின் பிரச்சினையில் பாராமுகமாக உள்ள மத்திய பாஜக அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப்.20-ம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ராமேசுவரத்தில் இருந்து வங்கக்கடலுக்கு கடந்த ஆக.27-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தண்டத் தொகையை கடந்த 6-ம் தேதியே செலுத்தவில்லை என்று கூறி, தமிழக மீனவர்களை மொட்டையடித்து, சிறை கழிவறைகளை சுத்தம்செய்ய வைத்து இலங்கை அரசு கொடுமைபடுத்தியுள்ளது. இதை மன்னிக்க முடியாது. இலங்கை அரசின் இந்த மனித தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் விதித்த தண்டத்தை செலுத்த காலகெடு உள்ள நிலையில், அதை செலுத்தாவிட்டால், நீதிமன்ற உத்தரவுப்படி தான் இலங்கை அரசு செயல்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து மீனவர்களை மொட்டையடித்து, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கும் அதிகாரத்தை எந்த பன்னாட்டு அமைப்பு இலங்கை அரசுக்கு வழங்கியது?

இலங்கை சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு தமிழக மீனவர்களுக்கு மட்டும் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு அல்ல. இந்திய இறையாண்மைக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE