முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா: முதல்வர், கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திமுக, அதிமுக, மதிமுக, அமமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆங்காங்கே அண்ணா படத்தை அலங்கரித்துவைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக: சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாவின் படத்துக்கும், அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பதிவு: 75 ஆண்டுகளாக திமுக இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா. முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் இறுதி மூச்சிலும் “அண்ணா... அண்ணா..” என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன். ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.

அதிமுக: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதிமுக: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடியேற்றி, அண்ணாவின் சிலைக்கு மாலையணிவித்தார். கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமமுக: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சென்னை அண்ணா சாலையில் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தி.க.: திராவிடர் கழகம் சார்பில் அதன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜய் புகழஞ்சலி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுயமரியாதை திருமணங்களை சட்டபூர்வமாக்கியது, மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE