திமுக பவளவிழா இலட்சினை: முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக பவளவிழா இலட்சினையை சென்னை அண்ணா அறிவாலயம் முகப்பு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திமுக சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்த நாள் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் பவள விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா வரும் 17-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்று திமுக தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் முகப்பில் அண்ணா, கருணாநிதி, பெரியார் உருவம் பொறித்த பவளவிழா இலட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முப்பெரும் விழா இலட்சினையை திறந்து வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE