திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் இடையூறுகளை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும்: வைகோ திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் கடந்த 2022-ல் நடந்த ஆர்எஸ்எஸ் மாநாடு, ‘இந்தியாவை இந்தியா என்று இனி அழைக்க கூடாது. பாரத் என்றுதான் அழைக்க வேண்டும். டெல்லிக்கு பதிலாக வாரணாசி தலைநகராக செயல்பட வேண்டும். முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்க கூடாது. சம்ஸ்கிருதம்தான் ஆட்சி மொழி’ போன்ற கோட்பாடுகளை கொண்டு நடத்தப்பட்டது.

இதை எதிர்த்து போராடுவதற்கு இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகத்தைதான் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனாலே திராவிட இயக்கத்துக்கு தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தை சாய்த்து விடலாம் என்று இந்துத்துவா சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த நேரத்தில் மதிமுக தனது முழுபலத்தை திமுகவுக்கு தொடர்ந்து வழங்கும்.

திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வருவதாக இருந்தாலும், அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும். ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. தமிழகத்தில் மதுவை எதிர்த்து மதிமுக போராடியதுபோல் வேறு எந்த கட்சியும் கிடையாது. மதுவை ஒழிக்க எல்லோரும் முன்வர வேண்டும். அதற்கு முன்னுரிமை எடுத்து கொள்ளக்கூடிய தகுதி மதிமுகவுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE