ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,217 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14,629 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.19 அடியாகவும், நீர் இருப்பு 80.11 டிஎம்சியாகவும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE