மண், மொழி, கலாச்சாரத்தின் கூறுகளை அறச்சிந்தனை மிக்க எழுத்தாக மாற்றியவர் நாஞ்சில் நாடன்: உச்ச நீதிமன்ற நீதிபதி பெருமிதம்

By செய்திப்பிரிவு

கோவை: ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் மற்றும் விஜயா வாசகர் வட்டம் சார்பில் கி.ரா. விருது வழங்கும் விழா கோவையில் நேற்று நடைபெற்றது. விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார். சக்தி மசாலா குழுமங்களின் நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி, எழுத்தாளர் ஆத்மார்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விழாவுக்குத் தலைமை வகித்து,எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குகி .ரா.விருது, ரூ.5 லட்சம் காசோலை மற்றும் பரிசுப் புத்தகங்களை வழங்கி பேசியதாவது: உன்னதப் படைப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி, மண், மொழி, கலாச்சாரத்தின் கூறுகளை அறச் சிந்தனை மிக்கஎழுத்தாக மாற்றிக் காட்டியுள்ளார் நாஞ்சில் நாடன்.

அவரின் படைப்புகளை வட்டார மொழி எழுத்தாகப் பார்க்க முடியாது. நாஞ்சில் நாடனின் படைப்புகளைக் கொண்டாட வேண்டும். சமூகத்தின் போக்கை,தனது படைப்புகள் மூலம் படமாகச் சொல்லி இருக்கிறார். பெண்களைக் கையாளுதல், பணியிடத் துன்புறுத்தல், சாதியம் ஆகியவற்றை தனது கதைமூலம் சமூகத்தை ஓங்கி அறைவதுபோல படைத்துள்ளார். சாதியம் வீழ்த்த வேண்டிய விஷயம்என்பதையும், தனது படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ் மொழியின் தன்மை குறைகிறது, எனவே மொழியை மீட்டெடுக்க வேண்டும் என்ற தவிப்பும் அவரது படைப்பில் உள்ளது. மக்கள் பண்பாட்டின் வேரைத் தேடிச்செல்லும் படைப்பாளிக்கு கி.ரா.விருது வழங்கியது சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ‘ஊருண்டு காணி இல்லேன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE