புதுச்சேரி ராஜ்நிவாஸ்: புதிய வசதிகள் அமைக்க ரூ.3.88 கோடியில் பூமிபூஜை செய்த முதல்வர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பழுதடைந்த ராஜ்நிவாஸ் ரூ. 13 கோடியில் கடற்கரையோரம் கட்டப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு மையக்கட்டடத்துக்கு மாறவுள்ளதால் புதிய வசதிகள் ஏற்படுத்த ரூ. 3.88 கோடியில் பூமிபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பூஜை செய்ய, ஆளுநர் கைலாஷ்நாதன் முதல் செங்கலை எடுத்து தந்தார்.

புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. ராஜ் நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட் டவை செயல்பட்டு வருகிறது. சுமார் 250 ஆண்டு பழமையான ராஜ் நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது.

புதுச்சேரி ராஜ்நிவாஸ் மிகவும் பழுதடைந்துள்ளதால் பல இடங்களில் தளத்துக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆளுநர் மாளிகையை வேறு இடத்துக்கு மாற்ற அறிவுறுத்தினார்.

அதையடுத்து பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டத்துக்கு ராஜ்நிவாஸ் மாற முடிவு எடுக்கப்பட்டது. பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் குடும்ப பொழுதுப்போக்கு மையம் கட்டடப்பட்டது. அதற்கு ரூ. 13 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது. 3 ஏக்கர் உள்ள இந்த இடத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் கீழ்தளமும், 2,500 சதுர மீட்டரில் முதல் தளமும், அதற்கு மேல் சிறிய பகுதியும் கட்டடமாக கட்டப்பட்டது. அதில் நட்சத்திர ஹோட்டல் நிறுவனங்களிடம் வருவாய் பெருக்க லீசுக்கு விட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது அம்முடிவை மாற்றி ஆளுநர் மாளிகையை இங்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகையை புனரமைக்கப்பட இருக்கும் நிலையில் தற்காலிக துணைநிலை ஆளுநர் இல்லம் மற்றும் அலுவலகத்தை பழைய சாராய ஆலை வளாகத்துக்கு மாற்றவுள்ளனர். இதற்காக தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள மையத்தில் ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஒட்டி பூமி பூஜை இன்று நடந்தது.

இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டனர். முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து சூடம் காட்டினார். முதல் செங்கலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் தந்தார். அவர் அதை கொடுத்து பணிகளை துவக்கி வைத்தார்.

துணைநிலை ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில், “பழைய சாராய வடி ஆலை இருந்த கட்டிடத்தில் குடும்ப பொழுதுபோக்கு மையம் கட்டப்பட்டது. அங்கு ஆளுநர் மாளிகை, அவரது அலுவலகம் இடம் மாறவுள்ளதால் அங்கு அறைகள், தேவையான வசதிகள், மின்வசதி, தரைதளம் அமைக்க ரூ. 3.88 கோடியில் பூமிபூஜை நடந்தது.பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடங்கள் கோட்டம் 1 வாயிலாக 4 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது.” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE