மின் வாரியத்தில் 79 பேர் இடமாற்றத்தை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனும் டான்ஜெட்கோ நிறுவனத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கும் அதிகாரிகள், ஊழியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 12ம் தேதி அரசு, டான் ஜெட்கோ, தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், 79 பேரை இடமாற்றம் செய்து கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், "முத்தரப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் மொத்தமாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் மனுதாரர் சங்கத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். இடமாற்றத்தால் அதிகாரிகள், ஊழியர்களின் பணியில் எந்த பாதிப்பும் இல்லை’’ என வாதிட்டார்.

டான்ஜெட்கோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், “79 பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், தற்போது அவர்கள் வகிக்கும் நிலையில் எந்த மாற்றமும் வராது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டான்ஜெட்கோவில் பணியாற்றும் நிலையில், 79 பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. முத்தரப்பு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கம் கையெழுத்திட்டுள்ளது. அது மனுதாரரை கட்டுப்படுத்தும் என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE