சென்னை: வேளச்சேரி பகுதியில் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 6 ஏரிகளை தூர் வார வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் எஸ்.குமாரதாசன் கடந்த 2021-ம் ஆண்டு, வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத்துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசுத் துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 21.44 ஹெக்டேர், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 56.39 ஹெக்டேர், அதே வாரியத்துக்கு அங்கீகரிக்கப்படாமல் 3.17 ஹெக்டேர், நெடுஞ்சாலைத்துறைக்கு 0.04 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசுத்துறைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதால் ஏரியின் நீர் கொள்திறன் 4-ல் ஒரு பங்காக, குறைந்துவிட்டது. பல்வேறு வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில் விடப்படுகிறது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அண்மையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் கடந்த செப்.10-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நீர்வள ஆதாரத்துறை, சுற்றுச்சூழல் துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், ஏரியில் 4 இடங்களில் கழிவுநீர் கலப்பதை சென்னை குடிநீர் வாரியம் தடுத்துவிட்டதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
» கிழக்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு
» “விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்” - காஷ்மீரில் பிரதமர் மோடி உறுதி
சிஎம்டிஏ சார்பில் ரூ.23 கோடியே 50 லட்சத்தில் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது உள்ள கொள்திறனான 4.35 மில்லியன் கனஅடி அளவை விட கூடுதலாக 22 சதவீதம் நீரை ஏரியில் நீரைத் தேக்க முடியும். ஏரியை ஆழப்படுத்தி தற்போது உள்ள நீர் தேக்க அளவை விட 50 சதவீதம் அதிகமாக தேக்கும் அளவுக்கு ஏரியை ஆழப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
வேளச்சேரி ஏரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பில் வசிக்கும் 955 குடும்பங்களை, வேளச்சேரி பகுதியில் வேறு இடத்தில் மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வாரிய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். இது சாத்தியமில்லாத நிலையில் பெரும்பாக்கத்தில் பரிசீலிக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஏரியை குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேளச்சேரியை சுற்றி வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி ஆகிய 6 ஏரிகள் உள்ளன. பருவமழை காலங்களில் வேளச்சேரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க இந்த 6 ஏரிகளையும் தூர் வாரலாம். கிண்டி தேசிய பூங்காவை சுற்றி ஏதேனும் ஏரிகள் இருப்பின் அவற்றையும் ஆழப்படுத்த வேண்டும். அது தொடர்பாக வனத்துறை, நீர்வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago