நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் கேட்டு செய்யூர் எம்எல்ஏ மிரட்டுவதாக ஒப்பந்ததாரர் வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தை சேரந்த டிஎஸ்ஆர் சன்ஸ் இந்தியா இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நபார்டு திட்டத்தில் ஊரக பகுதிகளான எம்வி ரோடு முதல் அகரம் பகுதி வரை சாலை அமைக்க நெஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. அதில், புத்திரன்கோட்டை முதல் மாம்பாக்கம் அகரம் ரோடு வரை இரு சாலைகள் அமைக்கும் டெண்டர் எங்களது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செய்யூர் எம்எல்ஏ பனையூர் எம்.பாபு, புத்திரன் கோட்டை பஞ்சாயத்து தலைவரான நிர்மல் குமார், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ராமையா ஆகியோர் லஞ்சம் கேட்டு மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.

வாகனங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகளை ஒரு வருடமாகியும் பாதி பணிகளை மட்டுமே நிறைவு செய்துள்ளோம். எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க எங்களுக்கும், எங்களது நிறுவன ஊழியர்களு்க்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், மனுதாரர் நிறுவனம் அளித்துள்ள புகார் மீது உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கி்ல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள செய்யூர் எம்எல்ஏ உள்ளி்ட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். அதேபோல மனுதாரர் அளித்துள்ள புகார் மீது போலீஸார் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE