தமிழகத்தில் வானிலை ரேடார் கண்காணிப்பில் இருந்து ஒரு இடமும் விடுபடாது: மத்திய புவி அமைச்சக செயலர் திட்டவட்டம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: அண்மைக் காலமாக தமிழக கடலோர மாவட்டங்கள், முன்பே கணிக்க முடியாத பேரிடரால் அதிகம்பாதிப்புக்குள்ளாகின்றன. ஒவ்வொரு பேரிடரும் தனித்துவமானதாக உள்ளன.

ஒவ்வொன்றை எதிர்கொள்ளும்போதும் முந்தைய படிப்பினைகள் பயனளிப்பதில்லை. கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தபோது, அதை வானிலை மையத்தால் சரியான நேரத்தில் கணித்து எச்சரிக்க முடியவில்லை. இதேபோன்று சென்னையிலும் அவ்வப்போது, வானிலை மையத்தால் கணிக்க முடியாத, எதிர்பாராத மழை பெய்து வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதற்கு போதிய வானிலை கட்டமைப்பும், நவீன உபகரணங்களும் இல்லை என்றுகுற்றஞ்சாட்டப்படுகிறது. தூத்துக்குடி பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அதை கணிக்க அப்பகுதி, தமிழகத்தில் உள்ள ரேடார்கண்காணிப்பு எல்லையில் வரவில்லை என்பது தெரியவந்தது.

அதனால் தமிழகம் போன்ற கடலோர மாநிலங்களில் பேரிடர்களின் தாக்கங்களை தணிக்க வானிலை கணிப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவில் வானிலை கணிப்புக்கென 160 ரேடார்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் 39 ரேடார்கள் மட்டுமே உள்ளன. ரூ.2 ஆயிரம் கோடி: இந்த சூழலில் வானிலையை துல்லியமாக கணிக்க, அதற்கானதரவுகளை பெறும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வானிலை கணிப்பை வலுப்படுத்த`மிஷன் வானிலை' (Mission Mausam) என்ற திட்டத்தை ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து `இந்து தமிழ்திசை' சார்பில் மத்திய புவி அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நாட்டில் வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நமக்கு தரவுகள் அதிகம் கிடைக்கும்போது, வானிலை கணிப்பு மேலும் துல்லியமாகும். தற்போது நாடு முழுவதும் 39 ரேடார்கள் உள்ளன. இரு ரேடார்களுக்கு இடையேஉள்ள இடைவெளி 432 கிமீ ஆக உள்ளது. அத்திட்டப் பணிகளை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க இருக்கிறோம். அப்போது நாட்டில் ரேடார்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 100 ஆக உயரும்.

தற்போது 12 கிமீ அளவில் மழை வாய்ப்புகளை கணிக்கிறோம்.அது 6 கிமீ ஆக குறையும். எடுத்துக்காட்டாக தற்போது தாம்பரம், கிண்டி ஆகிய பகுதிகளுக்கு பொதுவாக வானிலை முன்னறிவிப்பை வழங்குகிறோம். இத்திட்டத்தின் மூலம் இரு பகுதிகளுக்கும் தனித்தனியே வழங்க முடியும். தற்போது நவ்காஸ்ட் (Nowcast) எனப்படும் அடுத்தசில மணி நேரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அடுத்த6 மணி நேரத்துக்கு பொதுவாக கொடுக்கிறோம். இனி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் துல்லிய முன்னெச்சரிக்கை வழங்க முடியும்.

தமிழகத்தில் 3 ரேடார்கள்: தமிழகத்தில் தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகள் ரேடார் கண்காணிப்பு எல்லையில் வராது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சுமார் 3 இடங்களில் ரேடார்களை நிறுவ இருக்கிறோம். இதன் மூலம் ரேடார் கண்காணிப்பு எல்லையில் இடம்பெறாத பகுதி தமிழகத்தில் இருக்கவே இருக்காது.

வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அழுத்தம், ஈரப்பதம், வீசும் திசை, வேகம் போன்றவற்றை கண்காணிக்க நாளொன்றுக்கு இரு முறை பலூன்களை பறக்க விட்டுதரவுகளை சேகரிக்கிறோம். இத்திட்டத்தின்கீழ் வின்ட் புரொபைலர் (Wind Profiler) என்ற கருவி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தரவுகளை சேகரிக்க முடியும். இக்கருவிகளை தமிழகத்தில் பல இடங்களில் நிறுவ இருக்கிறோம். உள்ளூரை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது சாதாரண கைபேசியில், குறிப்பிட்ட 3 எண்களை டயல்செய்தால், அப்பகுதி சார்ந்த, அடுத்த5 நாட்களுக்கான மழை வாய்ப்புஉள்ளிட்ட வானிலை முன்னறிப்புகளை, உள்ளூர் மொழியில் அந்தகைபேசிக்கு அனுப்ப இருக்கிறோம். இத்திட்டம் மூலம் தமிழகத்தில் வானிலை கணிப்பும், முன்னறிவிப்புகளும் மேலும் துல்லியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE