அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்புகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இரு இடங்களிலும் பல்வேறு தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்காவாழ் தமிழர்களை சந்தித்தார்.

கடந்த 12-ம் தேதி வரை, 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய வாகன உற்பத்தி நிறுவனமான ‘ஃபோர்டு’ உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் 12-ம் தேதி இரவு சிகாகோவில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து துபாய் வந்த முதல்வர், ஓய்வுக்கு பிறகு, சென்னை புறப்பட்டார்.

இன்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து முதல்வரை வரவேற்கின்றனர். மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். விமான நிலையத்தில் இருந்து, முதல்வர் இல்லம் வரை வழிநெடுகிலும் திமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க காஞ்சிபுரம் வடக்கு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE