தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது: திமுக பவளவிழா மடலில் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘திமுக தொண்டர்களின் குரலில் உள்ள நியாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது’’ என்று கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் தொழில் முதலீட்டைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்க வழிவகுக்கின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்தியஅளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியஇயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 - பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திமுக என்ற பேரியக்கம் தொடக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து,முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

விருதுகள்: திமுகவின் ரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி, தொடர்ந்து வழங்கினார். 40 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிறப்பான நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர திமுகவில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. செப்.17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், அமெரிக்காவில் இருந்தபடியே திமுக ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலியில் ஆலோசனை நடத்தியதுடன், மாவட்டச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்களில் பவளவிழாவுக்கான சுவர் விளம்பரங்கள் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்துகொண்டேன். கூட்டங்களில் தொண்டர்களின் ஆழ்மனக்கருத்துகள் குரலாக வெளிப்பட்டன. அவர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமைதவறுவதில்லை என உறுதியளிக்கிறேன்.

கடந்த 1949-ம் ஆண்டு வடசென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் பேரறிஞர் அண்ணா. 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்குக்கு வழிகாட்டுகிறது என்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம், அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக, நண்பனாக திகழும் இயக்கம்தான் திமுக. இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர, செப்.17-ம் தேதி திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE