தமிழகத்தில் மதுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; புதுவையில் 900 பார்களாக அதிகரிப்பு: நாராயணசாமி வேதனை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: தமிழகத்தில் மதுவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் புதுச்சேரியில் 900 பார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள முக்கிய நான்குசாலைகளிலேயே 50 பார்கள் உள்ளன. அது இல்லாமல் ரெஸ்டோபார்களும் உள்ளன. இந்த அளவுக்கு பார்கள் திறந்தால், புதுச்சேரி தாங்குமா? என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டத்தை திருமாவளவன் நடத்துகிறார். அங்கு மதுவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. புதுச்சேரி என்பது மதுக்கடைகள் இருக்கும் மாநிலம். இவற்றை மூட வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 400 பார்கள் இருந்தன. மது விற்பனை கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் 900 பார்கள் உள்ளன. லஞ்சம் பெற்று ரெஸ்டோ பார்கள் நடத்த அனுமதி தருகிறார்கள்.

அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு: ஒரு லைசென்ஸை வைத்து 3 கடைகள் நடத்துகிறார்கள். இவற்றை யாரும் கண்காணிப்பதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவோ, நிர்வாகத்தில் தலையிடவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை. முதல்வர், அமைச்சர்களுக்கு தெரியாமல் அவர் உத்தரவு போட முடியாது. மக்களால் தேர்வான அரசின் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE