சென்னை விமான நிலைய டோல்கேட்டில் தனது காரை நிறுத்தி கண்ணிய குறைவாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி. சுதா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலைய டோல்கேட்டில் தனது காரை நிறுத்தி கண்ணியக் குறைவாக பேசி கட்டணம் வசூலித்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா எக்ஸ் வலைதள பக்கத்தில் குற்றம்சாட்டி புகார் அளித்தார். அதற்கு, சென்னை விமான நிலையம் தரப்பில் மன்னிப்பு கேட்ட அதிகாரிகள் விசாரித்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தார். விமான நிலையத்திலிருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, விமான நிலையடோல்கேட்டில் ஊழியர்கள் காரை நிறுத்தி பார்க்கிங் கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு,தான் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும்,தனக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என்றும் சுதா தெரிவித்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத ஊழியர்கள், கண்ணியக் குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டோல்கேட் மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு விவரத்தை சுதா தெரிவித்துள்ளார். அவரும் தரக்குறைவாக பேசியதோடு, டோல் கட்டணம் செலுத்தி விட்டுதான் போக வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

எக்ஸ் தளத்தில் பதிவு: இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் வலைதள பக்கத்தில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றுக்கும் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில் அவர், ``சென்னை விமான நிலைய டோல்கேட்டில் தனக்கு ஏற்பட்டுள்ள 2-வது சம்பவம் இது. நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும், என்னை அவமதிக்கும் விதத்தில், நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் போல் அதிகாலை 1.30 மணி அளவில் நடந்து கொண்டனர். என்னை அவமதித்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

அவருடைய குற்றச்சாட்டுக்கு, சென்னை விமான நிலைய அதிகாரிகள் எக்ஸ் வலைதள பக்கத்தில், ``உங்களுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. டோல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சி தனியார் நிறுவனம். உங்களுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து, நாங்கள் உடனடியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கிறோம். நடந்த சம்பவத்துக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE