சென்னையில் செப்.24-ல் அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி, அதிமுக மகளிரணி சார்பில் செப்.24-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம்புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதை கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கடந்த செப்.11-ம் தேதி வழக்கு விசாரணையின்போது, ``தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் சிறப்புக் குழு போடுவோம்’’ என்று திமுக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலைமை இதுவரை தமிழகத்துக்கு ஏற்பட்டதில்லை.

கடந்த 40 மாதங்களாக திமுக ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் செப்.24-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கட்சியின் மகளிரணிச் செயலாளர் பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் எஸ்,கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி மகளிரணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள்பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE