தனியார் பள்ளிகளின் புதிய கட்டிடங்களுக்கான ஆன்லைனில் விண்ணப்பங்கள்: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரான பி.டி. அரசகுமார் மற்றும் பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி கடந்த 2011 ஜன.1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகளின் புதிய கட்டிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்காக அளிக்கப்படும் விண்ணப்பத்தை நகர்ப்புற திட்டமிடல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.

எனவே, இதுதொடர்பான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, “தனியார் பள்ளிகளில் புதிய கட்டுமானம் மற்றும் கூடுதல் கட்டிடங்களுக்கான அனுமதியைப் பெற ஆன்லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

தற்போது நேரில் விண்ணப்பங்கள் பெறப்படுவதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என குற்றம்சாட்டினார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை நகர்ப்புற திட்டமிடல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 3 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும். இதேபோல மற்ற விண்ணப்பங்களையும் உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE