மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

By என். சன்னாசி

மதுரை: 2 ஆசிரியைகளை பலிகொண்ட தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று மதுரை. வேலை வாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றுக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மதுரைக்கு வருகின்றனர். குறிப்பாக, பணிக்குச் செல்லும் பெண்களும் மாணவிகளும் விரும்பி மதுரைக்கு வருகின்றனர். குடும்பத்தினருடன் வந்து தங்கமுடியாத பெண்களும் மாணவிகளும் தனி வீடு எடுத்துத் தங்கமுடியாததால் தனியார் மகளிர் விடுதிகள், இல்லங்களில் கட்டணம் செலுத்தி தங்குகின்றனர்.

மதுரை நகரில் இப்படியான மகளிர் விடுதிகளும், இல்லங்களும் அதிகரித்துள்ளன. மகளிர் விடுதிகளை புதிதாக ஆரம்பிக்க, சமூகநலத் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். விடுதிக் கட்டிடத்தின் உறுதித்தன்மை, சுத்தமான சமையல் கூடம், போக்குவரத்து வசதி, விசாலமான தெரு, சாலை, சுகாதாரமான பகுதி, பாதுகாப்பு, காவலாளி உள்ளிட்ட போதிய பணியாளர் நியமனம், தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அம்சங்களை உறுதி செய்த பிறகே விடுதிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர்.

மதுரையைச் சுற்றி சுமார் 35-க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் செயல்படுகின்றன. இதில்லாமல் முறையான அனுமதியின்றி அண்ணாநகர், கே.கே.நகர், சொக்கிகுளம், காளவாசல் போன்ற இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகளும், இல்லங்களும் புற்றீசல் போல் முளைத்துள்ளன. இங்கு தங்குவோரிடம் முறையான ஆவணங்கள் கேட்பதில்லை எனவும் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எந்த அதிகாரியும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டுகிறார்கள் முறையான அனுமதிகளை பெற்று விடுதிகளை நடத்துபவர்கள்.

இப்படியான சூழலில் தான் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள 'விசாகா' என்ற தனியார் மகளிர் விடுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஃபிரிட்ஜ் வெடித்து அதிலிலுள்ள சிலிண்டர் நச்சு புகையால் மூச்சுத் திணறி அங்கு தங்கியிருந்த 2 ஆசிரியைகள் உயிரிழந்துள்ளனர். விடுதி வார்டன் உட்பட 5 பேர் பாதிக்கப்பட்டனர். காலாவதியான கட்டிடம் என்பதால் மின் கசிவு காரணமாகவே ஃபிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்ததால் இந்த 'விசாகா' விடுதி பற்றி வெளியில் தெரிந்துள்ளது. இதேபோல் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் இன்னும் நிறைய விடுதிகள் மதுரைக்குள் செயல்படுகின்றன. மேலும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டாமல் சம்பந்தப்பட்ட விடுதிகளை ஆய்வு செய்து அவற்றை இழுத்துமூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ''மதுரை நகரில் 36 தனியார் மகளிர் விடுதிகள் செயல்படுகின்றன. புதிதாக விடுதி தொடங்குவோர் முறையான அனுமதியைப் பெறவேண்டும். ஏதாவது புகார் வந்தால் ஆய்வு செய்யப்படும். மகளிர் விடுதிகளை மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும். அதுகுறித்தும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்வோம். அங்கு வழங்கப்படும் உணவை முதற்கொண்டு சாப்பிட்டுப் பார்ப்போம். விதிமுறையை முறையாக பின்பற்றாத விடுதிகளுக்காகான உரிமம் ரத்து செய்யப்படும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் விபத்து நடந்த விடுதி விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளது. காலாவதியான கட்டிடத்தில் இயங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ஆட்சியரும் மதுரையிலுள்ள தனியார் விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். உரிய அனுமதியின்றி, விதிமுறைகளை பின்பற்றாமல் மகளிர் விடுதிகள் நடத்துவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE