அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.13) நேரில் ஆஜரானார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக நேரில் ஆஜரானார்.

அப்போது அவர், நீதிமன்ற சம்மனை பெற மறுத்துவிட்டதாக கூறியது தவறு எனவும், நீதிமன்ற சம்மன் ஏதும் தனக்கு வரவில்லை எனவும், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார்.

தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் இருந்த போதும், நெல்லை மாவட்டத்தில் சொந்த ஊரில் இருந்த போதும் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் சம்மன் அல்லது கடிதங்கள் ஏதும் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE