மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: உபரி நீர் நிரப்புதல் நிறுத்தம்; 35 ஏரிகள் மட்டுமே நிரம்பின

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியாக சரிந்ததால் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்தில் 0.51 டிஎம்சி நீர் எடுக்கப்பட்டு, இதுவரை 35 ஏரிகள் முழுமையான நிரப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை மாதம் 30- ம் தேதி எட்டியது.

இதையடுத்து அணைக்கு வந்த நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாகவும், நீர் மின் நிலையம், கால்வாய் வழியாகவும் அப்படியே வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் படி, மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பும் பணி கடந்த ஜூலை 31-ம் தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 வட்டங்களில் உள்ள 56 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் கடந்த 44 நாட்களாக நீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் இன்று 113 அடியாக சரிந்ததல் உபரிநீர் எடுக்கும் பணி இன்று அதிகாலை முதல் நிறுத்தப்பட்டது. இந்த உபரிநீர் திட்டத்தின் மூலம் தற்போது வரை, 35 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரி மற்றும் நங்கவள்ளி ஏரி ஆகியவற்றின் வழியாக, நீர்நிலைகளுக்கு நீர் நிரப்பட்டு வந்தது. இதற்காக நீரேற்று நிலையத்தில் இருந்து விநாடிக்கு 214 கனஅடி நீர் எடுக்கப்பட்டது. இதில் எம்.காளிப்பட்டி, மானத்தாள் ஏரி, நங்கவள்ளி ஏரி, சாணார்பட்டி ஏரி, டி.மாரமங்கலம் ஏரி, தாரமங்கலம் ஏரி, பெரியேரிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, உள்ளிட்ட 35 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதில், எம்.காளிப்பட்டி வழியில் 14 ஏரிகளும், நங்கவள்ளி வழியில் 8 ஏரிகளும் மற்றும் வெள்ளாளபுரம் வழியில் 13 ஏரிகளும் என மொத்தமாக 35 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. உபரிநீர் திட்டத்தில் நீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டாலும், இன்னும் 5 ஏரிகளுக்கு நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கூடுதலாக 5 ஏரிகள் இன்று மாலைக்குள் நிரம்பினால், ஒட்டுமொத்தமாக 40 ஏரிகள் உபரிநீர் திட்டத்தில் நிரம்பும். மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் இதுவரை 0.51 டிஎம்சி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE